Wednesday, August 3, 2016

சுட்ட பள்ளி

(Mohamed Rizwan Cassim, Aged 10. Massacred by LTTE on 03/08/1990 in Meera Jummah Mosque Kattankudy - 01)


துயரத்தின் ஆயிரம் கண்களும் தழும்புகளென விரிந்திருக்கும் 
சுட்டபள்ளியின் நினைவுகளின் மேல் 
இருபத்தியாறாவது தடவையும்
அதே சிறுவனைக் கிடத்திவிட்டுச் செல்கிறது கவிதை. 

பத்து வயதும் துள்ளலும்
ஈரத் தொப்பென நனைந்த ஒரு குழந்தைச் சாரனும் 
ஒரு பூ முகமுமே அவன் விபரம்.

வெடில் கேட்ட போது 
செய்வதறியாது அவன் ஓடித் திரிந்ததைப் 
பார்த்தபடி படுத்திருந்ததாக 
தப்பி வந்த பலர் இன்றும் எனக்குச் சொல்கிறார்கள்

அப்போதுதான் அவனும் சுடப்பட்டானாம்

மரணத்தை அறியும் அவகாசம் ஒரு பந்தின் துள்ளலளவே அவனுக்கு

அதே ரவை துளைத்த 
சுட்டபள்ளியின் இடது தூணொன்றின் துளைக்குள் 
வலியில் அவன் அலறியதன் எதிரொலியை
நான் ஒவ்வொருமுறையும் நின்று காதை வைத்துக் கேட்பேன்.

சுவர்களின் வடுக்களுக்குள்ளிருந்து
வலியில் அவன் அலறி அழைத்த 'அல்லாஹ்' வும் 'கலிமா' வும்
மாறி மாறிக் கேட்டுக்கொண்டேயிருக்கும். 

இடைக்கிடையே 'தம்பி' 'தம்பி' என்று எனக்கு மட்டும் கேட்கும். 



*தம்பி - பிரபாகரனின் செல்லப்பெயர்

No comments: